வியாழன், 5 டிசம்பர், 2013

சூது இது!

சூது இது!

நந்தமிழ்ப் பிள்ளைகள் நாடிக் கற்றிட
அந்தமழ் வழியினில் கல்வி இல்லையாம்!
பைந்தமிழ் அன்னையின் படிமம் வைப்பராம்!
செந்தமிழ் அழித்திடச் செய்யும் சூதிது.


(புதுவைத்தெளிதமிழ் இதழில்(17-11-2019) வந்தது)

வியாழன், 31 அக்டோபர், 2013

நாடகமே!

நாடகமே!

திட்பத் துணையாய்த் திகழ்ந்தே இனமழி தீச்செயலில்
நுட்பக் கரவினில் நொய்சிங் களருக்கே நோன்றுதவி
ஒட்பிலாப் பக்சே ஒடுக்கு மிலங்கையை ஓர்ந்ததுவே
நட்புநா டென்று நவில்வதெல் லாமொரு நாடகமே!                                                                            (18-10-2013 புதுவைத் 'தெளிதமிழ்' இதழில் வந்தது)                                                                             

வியாழன், 26 செப்டம்பர், 2013

இனமழிக்கும் வேலை!

இனமழிக்கும் வேலை!

அனைத்தரசுப் பள்ளியிலும் ஆங்கிலம்தான் என்றே
அனைவர்க்கும் கல்விமொழி ஆக்க முனைந்தார்!
கனன்று தடுத்திடுவோம்! கண்டிப்போம்! வாரீர்!
இனமழிக்கும் வேலை இது.                                                                                                   (புதுவைத் தெளிதமிழ் இதழில் வெளிவந்தது)                     

புதன், 11 செப்டம்பர், 2013

புல்லர்சொல் தள்ளுபுறம்!

புல்லர்சொல் தள்ளுபுறம்!

மன்பதையைக் கூறாக்கும் மண்அரத்த ஆறாக்கும்
புன்மதம் சாதி புதையாழம்! அன்புடனே
நல்லிணக்கம் நாடிடுக! நஞ்சாம் மனுமறைகள்
புல்லர்சொல் தள்ளுபுறம், பொய்!

ஞாயிறு, 25 ஆகஸ்ட், 2013

அல்லல்கட் டில்லென்றே ஒல்கஅறு!

அல்லல்கட் டில்லென்றே ஒல்கஅறு!

நீர்மறுப்பும்  மின்பறிப்பும் நீளும் மொழித்திணிப்பும்
ஊர்நா டுலகெதிர்தீங்(கு) ஊறுலையும் தீர்வுண்டோ?
வல்லிருப்(பு) அல்லல்கட் டில்லென்றே ஒல்கஅறு
வல்விலங்கு புல்லநீ மாறு!


(புதுவைத் தெளிதமிழ் இதழில் வெளிவந்தது)                                                                   புல்ல = போல (உவம உருபு)                     

வியாழன், 22 ஆகஸ்ட், 2013

காடு.

தாய்மொழியில் பேசினால் தண்டனை பள்ளியிலே!
தாய்தந்தை பேரும் தமிழில்லை! போய்வணங்கச்
சொற்றமிழ்க் கில்லையிடம்! சொல்லுகநா டில்லையிது
கற்றைக்கு முட்டைக்குங் காடு.

அழகார் தமிழில் அயன்மொழிச் சொற்கள்
புழங்கக் கலந்தெழுதல் புன்மை! வழக்கமென
நற்றமிழ்க்(கு) ஊறுறுத்த நாடி எழுதுலகு
கற்றைக்கு முட்டைக்குங் காடு.

(கல் தைக்கும் முள் தைக்கும் காடு > கற்றைக்கு முட்டைக்குங் காடு)

புதுவை தெளிதமிழ் இதழில் வெளிவந்தவை.

சனி, 3 ஆகஸ்ட், 2013

தம்பிக்கு...!

                  (எழுசீர் மண்டிலம்) 

மக்களின் நெஞ்சில் நிலைத்தனை நீயே!
          மாநிலம் பாடுமுன் புகழே! 
குக்கலை இங்கே ஆட்சியில் அமர்த்திக் 
          குறுகினம் இரண்டகம் கண்டே! 
அக்கரைப் பேயித் தாலியை விட்டே 
          அழிவினைக் கிங்குவந் ததுவே! 
இக்கண முயிரோ டுள்ளையோ யிலையோ 
          இழிவொடு யாமுறை கின்றோம்! 

புதன், 24 ஜூலை, 2013

பேதைகளே!

பேதைகளே!


பெறலருந் தாயைத் தமிழை மறந்தீர்! பெயரிழந்தீர்!
விறல்வர லாறு விடுதலை யற்றீர்! வீழ்ந்திழிவீர்!
திறலறத் தாழ்ந்தே திருத்தமிழ் மீளாத் திரிதலுறப்
பிறமொழி நக்கிப் பிழைக்க நினைக்கும் பேதைகளே!

அறங்கூ றருந்தமிழ் ஆன்ற முதன்மொழி யாமதனை
உறங்கி அழிப்பீர்! உயர்தனிச் செம்மை உலகறிந்தும்
இறப்புற விட்டீர்! இளையவர் கற்க இசைவளியீர்!
பிறமொழி நக்கிப் பிழைக்க நினைக்கும் பேதைகளே!                                                (தெளிதமிழ்(17-7-2013) - புதுவையிலிருந்து வரும் திங்கள் இதழில் வெளிவந்தவை.)  

திங்கள், 22 ஜூலை, 2013

இழிகின்றார்!

இழிகின்றார்!                                                                                                                                       மூத்த தமிழே முதற்றாய் மொழியாம் முடிவைச் சொல்கின்றார்!                                                                                                                                 ஏத்தும் ஆய்வர் இந்நா கரிகம்எவர்க்கும் முதலென்றார்!                                                                                                                                           காத்தல் பேணல் கருதாத் தமிழர்கடைகெட் டழிகின்றார்!                                                                                                                                             ஊத்தை உணர்வால் உறுதன் னலத்தால் உலகில் இழிகின்றார்!

கொல்களமாம் கூடங் குளம்.!

கொல்களமாம் கூடங் குளம!


தீங்கைத் தெளிவாய்த் தெரிந்துபிற மாநிலத்தார்
ஆங்கமைக்க ஒப்பார் அணுவுலையை – ஈங்கமைத்தீர்
சொல்லொணா இன்னலெலாம் சூழ்கேட்டில் எம்மக்கள்
கொல்களமாம் கூடங் குளம்.

எந்தமிழ் மறமே!

எந்தமிழ் மறமே!


ஈழவான் முழுதும் இருந்தெமை நோக்கும்
ஈடிலாத் தலைவ!எம் தம்பி!
காழகங் கொண்டே கடுவினை ஏற்ற
காளையே! சூளென உரைப்போம்!
ஊழலர் கேழல் உலுத்தரை ஒதுக்கி
உறுதியாய் விடுதலை மீட்போம்!
சூழலைச் சமைப்போம்! சூழ்பகை சாய்ப்போம்!
சொந்தமே! எந்தமிழ் மறமே!

புதன், 24 ஏப்ரல், 2013

சங்கப் பனுவல் படி!

சங்கப் பனுவல் படி!

விழுப்புரம் சங்க இலக்கியப் பொதும்பர் என்ற அமைப்பு, சங்கப் பனுவல் படி என்ற ஈற்றடி அமைத்து வெண்பா எழுதித்தருமாறு கேட்டபோது எழுதித்தந்த வெண்பாவை அனைவருடைய பார்வைக்குமாகக் கீழே தருகிறேன்:

இங்கிவ் வுலகில்நீ யாரென் றறிந்துணர
மங்காப் புகழ்ப்பண்பின் மாண்பறிய கங்குலாய்த்
தங்கியுள இற்றையிழி தாழ்வகற்ற எந்தமிழா
சங்கப் பனுவல் படி.  

----------------------------------------------------

திங்கள், 22 ஏப்ரல், 2013

வெற்றுக் கூச்சல்!

வெற்றுக் கூச்சல்!


வெற்றுரைகள் முழக்கங்கள் வீறார்ப்பு அறைகூவல்
வேலை இல்லா

எற்றுக்கும் உதவாத எடுபிடிகள் போற்றுரைகள்
எள்ளல் கூச்சல்!

பற்றெல்லாம் பெறவிருக்கும் பணங்காசில்! மேடைதொறும்
பார்க்கும் இந்தச்

சொற்றெரியாப் பதர்மாந்தர் சூளுரைகள் பேரொலிகள்
சொல்லப் போமோ?



-----------------------------------------------------

ஞாயிறு, 31 மார்ச், 2013

கொடுங்கூளி!



மகடூஉ முன்னிலை அமைந்த வெண்பா!

புதுவையினின்றும் வரும் திங்களிதழ் தெளிதமிழ் மகடூஉ முன்னிலை அமந்த வெண்பா ஒன்றை விரும்பிய பொருளில் இயற்றி விடுக்கக் கேட்டிருந்தது. அவ்வாறே எழுதி விடுத்த வெண்பா இது:

எந்தமிழர் ஒன்றரையி லக்கத்தர் கொன்றழிக்க
அந்தஇழி பக்சேஉன் அம்பானான்! தந்திரமாய்க்
குந்தியுள குக்கல் குறளி கொடுங்கூளி!
தந்திடுவார் தக்கதொரு தீர்ப்பு.

திங்கள், 18 மார்ச், 2013

இனியும் நாம் இந்தியரா? எண்ணிப் பாரீர்!


இனியும் நாம் இந்தியரா? எண்ணிப் பாரீர்!


மாணவரும் மற்றவரும் மருகி வேண்டி
மாக்கேடன் அரசபக்சே அரசின் மீது
கோணலிலாக் கடுமையுடன் அ.நா. மன்றில்
கொணர்வீர்ஓர் தீர்மானம் என்றார்! தில்லி
கேணமிலா அமெரிக்கத் தீர்மா னத்தைக்
கெடுத்துவலி விலதாக்கி நீர்க்கச் செய்ய
நாணமின்றித் திருத்தங்கள் அளிக்கு தய்யா!
நாமினியும் பொறுப்பதுவோ நன்றோ சொல்லீர்!

போர்க்குற்றம் இனக்கொலைசெய் புல்ல னுக்கே
போகின்றார் துணையாக! பொறுத்துப் பார்த்தோம்!
பார்க்குள்ளே நல்மனத்தர் மாந்த நேயர்
பகர்கின்ற உரையேற்கார்! பாவி யைத்தான்
சேர்க்கையுற தேர்கின்றார்! சீச்சீ இன்னும்
சேர்ந்திருத்தல் தீதன்றோ? தமிழ ரென்னும்
யார்க்குமிதே எச்சரிக்கை! இனியும் நம்மை
இந்தியரென் றுரைத்திடுதல் இழிவே அன்றோ?

இனக்கொலைக்குத் துணைபோனார்! இன்னும் ஈழத(து)
எண்ணற்ற கொடுமைகட்கும் இவர்கூட் டாளி!
மனமில்லார் காவிரிதொட் டெல்லா ஆற்று
மாய்மாலக் கயமைகளைக் கண்டு கொள்ளார்!
சினமுற்றே மாணவரும் செஞ்சான் றோரும்
செப்புமுரை செவிகொள்ளார் சிங்க ளர்க்கே
இனமுமிவர் காப்பாளி என்ப தாலே
இந்தியநா டெமக்கயல்நா டென்றே சொல்வோம்!

தாய்த்தமிழோ அழிவினிலே தகுதி இல்லா
தருக்கிந்தி மொழிக்கிங்கே தளராப் பேணல்!
ஆய்ந்தெண்ணில் அனைத்திலுமே அவர்க்கே முன்மை!
அடிமையென அவர்க்குக்கீழ் எதிலும் ஏனோ?
ஏய்க்கின்றார் தமிழரையே! இங்கே சில்லோர்
எத்தரிரண் டகரெனவே துணைபோ கின்றார்!
மாய்வெனினும் துணிந்தேற்போம்: மானங் கெட்டே
மாண்பிலரின் கீழ்வாழ மாட்டோம் என்போம்!

-------------------------------------------------------