வியாழன், 31 அக்டோபர், 2013

நாடகமே!

நாடகமே!

திட்பத் துணையாய்த் திகழ்ந்தே இனமழி தீச்செயலில்
நுட்பக் கரவினில் நொய்சிங் களருக்கே நோன்றுதவி
ஒட்பிலாப் ‘பக்சே’ ஒடுக்கு மிலங்கையை ஓர்ந்ததுவே
நட்புநா டென்று நவில்வதெல் லாமொரு நாடகமே!                                                                            (18-10-2013 புதுவைத் 'தெளிதமிழ்' இதழில் வந்தது)                                                                             

வியாழன், 26 செப்டம்பர், 2013

இனமழிக்கும் வேலை!

இனமழிக்கும் வேலை!

அனைத்தரசுப் பள்ளியிலும் ஆங்கிலம்தான் என்றே
அனைவர்க்கும் கல்விமொழி ஆக்க – முனைந்தார்!
கனன்று தடுத்திடுவோம்! கண்டிப்போம்! வாரீர்!
இனமழிக்கும் வேலை இது.                                                                                                   (புதுவைத் ‘தெளிதமிழ்’ இதழில் வெளிவந்தது)                     

புதன், 11 செப்டம்பர், 2013

புல்லர்சொல் தள்ளுபுறம்!

புல்லர்சொல் தள்ளுபுறம்!

மன்பதையைக் கூறாக்கும் மண்அரத்த ஆறாக்கும்
புன்மதம் சாதி புதையாழம்! – அன்புடனே
நல்லிணக்கம் நாடிடுக! நஞ்சாம் மனுமறைகள்
புல்லர்சொல் தள்ளுபுறம், பொய்!

ஞாயிறு, 25 ஆகஸ்ட், 2013

அல்லல்கட் டில்லென்றே ஒல்கஅறு!

அல்லல்கட் டில்லென்றே ஒல்கஅறு!

நீர்மறுப்பும்  மின்பறிப்பும் நீளும் மொழித்திணிப்பும்
ஊர்நா டுலகெதிர்தீங்(கு) ஊறுலையும் – தீர்வுண்டோ?
வல்லிருப்(பு) அல்லல்கட் டில்லென்றே ஒல்கஅறு
வல்விலங்கு புல்லநீ மாறு!


(புதுவைத் ‘தெளிதமிழ்’ இதழில் வெளிவந்தது)                                                                   புல்ல = போல (உவம உருபு)                     

வியாழன், 22 ஆகஸ்ட், 2013

காடு.

தாய்மொழியில் பேசினால் தண்டனை பள்ளியிலே!
தாய்தந்தை பேரும் தமிழில்லை! – போய்வணங்கச்
சொற்றமிழ்க் கில்லையிடம்! சொல்லுகநா டில்லையிது
கற்றைக்கு முட்டைக்குங் காடு.

அழகார் தமிழில் அயன்மொழிச் சொற்கள்
புழங்கக் கலந்தெழுதல் புன்மை! – வழக்கமென
நற்றமிழ்க்(கு) ஊறுறுத்த நாடி எழுதுலகு
கற்றைக்கு முட்டைக்குங் காடு.

(கல் தைக்கும் முள் தைக்கும் காடு > கற்றைக்கு முட்டைக்குங் காடு)

புதுவை ‘தெளிதமிழ்’ இதழில் வெளிவந்தவை.

சனி, 3 ஆகஸ்ட், 2013

தம்பிக்கு...!

                  (எழுசீர் மண்டிலம்) 

மக்களின் நெஞ்சில் நிலைத்தனை நீயே!
          மாநிலம் பாடுமுன் புகழே! 
குக்கலை இங்கே ஆட்சியில் அமர்த்திக் 
          குறுகினம் இரண்டகம் கண்டே! 
அக்கரைப் பேயித் தாலியை விட்டே 
          அழிவினைக் கிங்குவந் ததுவே! 
இக்கண முயிரோ டுள்ளையோ யிலையோ 
          இழிவொடு யாமுறை கின்றோம்! 

புதன், 24 ஜூலை, 2013

பேதைகளே!

பேதைகளே!


பெறலருந் தாயைத் தமிழை மறந்தீர்! பெயரிழந்தீர்!
விறல்வர லாறு விடுதலை யற்றீர்! வீழ்ந்திழிவீர்!
திறலறத் தாழ்ந்தே திருத்தமிழ் மீளாத் திரிதலுறப்
பிறமொழி நக்கிப் பிழைக்க நினைக்கும் பேதைகளே!

அறங்கூ றருந்தமிழ் ஆன்ற முதன்மொழி யாமதனை
உறங்கி அழிப்பீர்! உயர்தனிச் செம்மை உலகறிந்தும்
இறப்புற விட்டீர்! இளையவர் கற்க இசைவளியீர்!
பிறமொழி நக்கிப் பிழைக்க நினைக்கும் பேதைகளே!                                                (‘தெளிதமிழ்’(17-7-2013) - புதுவையிலிருந்து வரும் திங்கள் இதழில் வெளிவந்தவை.)