திங்கள், 18 மார்ச், 2013

இனியும் நாம் இந்தியரா? எண்ணிப் பாரீர்!


இனியும் நாம் இந்தியரா? எண்ணிப் பாரீர்!


மாணவரும் மற்றவரும் மருகி வேண்டி
மாக்கேடன் அரசபக்சே அரசின் மீது
கோணலிலாக் கடுமையுடன் அ.நா. மன்றில்
கொணர்வீர்ஓர் தீர்மானம் என்றார்! தில்லி
கேணமிலா அமெரிக்கத் தீர்மா னத்தைக்
கெடுத்துவலி விலதாக்கி நீர்க்கச் செய்ய
நாணமின்றித் திருத்தங்கள் அளிக்கு தய்யா!
நாமினியும் பொறுப்பதுவோ நன்றோ சொல்லீர்!

போர்க்குற்றம் இனக்கொலைசெய் புல்ல னுக்கே
போகின்றார் துணையாக! பொறுத்துப் பார்த்தோம்!
பார்க்குள்ளே நல்மனத்தர் மாந்த நேயர்
பகர்கின்ற உரையேற்கார்! பாவி யைத்தான்
சேர்க்கையுற தேர்கின்றார்! சீச்சீ இன்னும்
சேர்ந்திருத்தல் தீதன்றோ? தமிழ ரென்னும்
யார்க்குமிதே எச்சரிக்கை! இனியும் நம்மை
இந்தியரென் றுரைத்திடுதல் இழிவே அன்றோ?

இனக்கொலைக்குத் துணைபோனார்! இன்னும் ஈழத(து)
எண்ணற்ற கொடுமைகட்கும் இவர்கூட் டாளி!
மனமில்லார் காவிரிதொட் டெல்லா ஆற்று
மாய்மாலக் கயமைகளைக் கண்டு கொள்ளார்!
சினமுற்றே மாணவரும் செஞ்சான் றோரும்
செப்புமுரை செவிகொள்ளார் சிங்க ளர்க்கே
இனமுமிவர் காப்பாளி என்ப தாலே
இந்தியநா டெமக்கயல்நா டென்றே சொல்வோம்!

தாய்த்தமிழோ அழிவினிலே தகுதி இல்லா
தருக்கிந்தி மொழிக்கிங்கே தளராப் பேணல்!
ஆய்ந்தெண்ணில் அனைத்திலுமே அவர்க்கே முன்மை!
அடிமையென அவர்க்குக்கீழ் எதிலும் ஏனோ?
ஏய்க்கின்றார் தமிழரையே! இங்கே சில்லோர்
எத்தரிரண் டகரெனவே துணைபோ கின்றார்!
மாய்வெனினும் துணிந்தேற்போம்: மானங் கெட்டே
மாண்பிலரின் கீழ்வாழ மாட்டோம் என்போம்!

-------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக