புதன், 24 ஜூலை, 2013

பேதைகளே!

பேதைகளே!


பெறலருந் தாயைத் தமிழை மறந்தீர்! பெயரிழந்தீர்!
விறல்வர லாறு விடுதலை யற்றீர்! வீழ்ந்திழிவீர்!
திறலறத் தாழ்ந்தே திருத்தமிழ் மீளாத் திரிதலுறப்
பிறமொழி நக்கிப் பிழைக்க நினைக்கும் பேதைகளே!

அறங்கூ றருந்தமிழ் ஆன்ற முதன்மொழி யாமதனை
உறங்கி அழிப்பீர்! உயர்தனிச் செம்மை உலகறிந்தும்
இறப்புற விட்டீர்! இளையவர் கற்க இசைவளியீர்!
பிறமொழி நக்கிப் பிழைக்க நினைக்கும் பேதைகளே!                                                (தெளிதமிழ்(17-7-2013) - புதுவையிலிருந்து வரும் திங்கள் இதழில் வெளிவந்தவை.)  

திங்கள், 22 ஜூலை, 2013

இழிகின்றார்!

இழிகின்றார்!                                                                                                                                       மூத்த தமிழே முதற்றாய் மொழியாம் முடிவைச் சொல்கின்றார்!                                                                                                                                 ஏத்தும் ஆய்வர் இந்நா கரிகம்எவர்க்கும் முதலென்றார்!                                                                                                                                           காத்தல் பேணல் கருதாத் தமிழர்கடைகெட் டழிகின்றார்!                                                                                                                                             ஊத்தை உணர்வால் உறுதன் னலத்தால் உலகில் இழிகின்றார்!

கொல்களமாம் கூடங் குளம்.!

கொல்களமாம் கூடங் குளம!


தீங்கைத் தெளிவாய்த் தெரிந்துபிற மாநிலத்தார்
ஆங்கமைக்க ஒப்பார் அணுவுலையை – ஈங்கமைத்தீர்
சொல்லொணா இன்னலெலாம் சூழ்கேட்டில் எம்மக்கள்
கொல்களமாம் கூடங் குளம்.

எந்தமிழ் மறமே!

எந்தமிழ் மறமே!


ஈழவான் முழுதும் இருந்தெமை நோக்கும்
ஈடிலாத் தலைவ!எம் தம்பி!
காழகங் கொண்டே கடுவினை ஏற்ற
காளையே! சூளென உரைப்போம்!
ஊழலர் கேழல் உலுத்தரை ஒதுக்கி
உறுதியாய் விடுதலை மீட்போம்!
சூழலைச் சமைப்போம்! சூழ்பகை சாய்ப்போம்!
சொந்தமே! எந்தமிழ் மறமே!