ஞாயிறு, 25 ஆகஸ்ட், 2013

அல்லல்கட் டில்லென்றே ஒல்கஅறு!

அல்லல்கட் டில்லென்றே ஒல்கஅறு!

நீர்மறுப்பும்  மின்பறிப்பும் நீளும் மொழித்திணிப்பும்
ஊர்நா டுலகெதிர்தீங்(கு) ஊறுலையும் தீர்வுண்டோ?
வல்லிருப்(பு) அல்லல்கட் டில்லென்றே ஒல்கஅறு
வல்விலங்கு புல்லநீ மாறு!


(புதுவைத் தெளிதமிழ் இதழில் வெளிவந்தது)                                                                   புல்ல = போல (உவம உருபு)                     

வியாழன், 22 ஆகஸ்ட், 2013

காடு.

தாய்மொழியில் பேசினால் தண்டனை பள்ளியிலே!
தாய்தந்தை பேரும் தமிழில்லை! போய்வணங்கச்
சொற்றமிழ்க் கில்லையிடம்! சொல்லுகநா டில்லையிது
கற்றைக்கு முட்டைக்குங் காடு.

அழகார் தமிழில் அயன்மொழிச் சொற்கள்
புழங்கக் கலந்தெழுதல் புன்மை! வழக்கமென
நற்றமிழ்க்(கு) ஊறுறுத்த நாடி எழுதுலகு
கற்றைக்கு முட்டைக்குங் காடு.

(கல் தைக்கும் முள் தைக்கும் காடு > கற்றைக்கு முட்டைக்குங் காடு)

புதுவை தெளிதமிழ் இதழில் வெளிவந்தவை.

சனி, 3 ஆகஸ்ட், 2013

தம்பிக்கு...!

                  (எழுசீர் மண்டிலம்) 

மக்களின் நெஞ்சில் நிலைத்தனை நீயே!
          மாநிலம் பாடுமுன் புகழே! 
குக்கலை இங்கே ஆட்சியில் அமர்த்திக் 
          குறுகினம் இரண்டகம் கண்டே! 
அக்கரைப் பேயித் தாலியை விட்டே 
          அழிவினைக் கிங்குவந் ததுவே! 
இக்கண முயிரோ டுள்ளையோ யிலையோ 
          இழிவொடு யாமுறை கின்றோம்!